பாமக நிறுவனர் ராமதாஸை திடீரென ஆடிட்டர் குருமூர்த்தி சந்தித்தது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகைக்கு முன்னதாக நடந்தது முக்கியத்துவம் பெறுகிறது. பாமகவை பாஜக கூட்டணிக்குள் மீண்டும் கொண்டு வருவதற்காக குருமூர்த்தி முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து விரிந்துவந்த நிலையில், இது பாமகவுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. முகுந்தனின் நியமனம், அன்புமணியின் செயல் தலைவர் பதவிக்கான அறிவிப்பு ஆகியவற்றால் இந்த முரண்பாடுகள் மேலும் வெளிப்பட்டன.
அமித் ஷா கடந்த முறை சென்னை வந்தபோது, அன்புமணிக்கு பதவி நீக்கம் அறிவிக்கப்பட்டது. இப்போது அவர் மீண்டும் மதுரை வரவுள்ள நிலையில், அதற்குள் பாமக ஒத்துழைப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என பாஜக மேலிடம் விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழலில் தைலாபுரத்தில் இன்று காலை ராமதாஸை அன்புமணி சந்தித்தார். அதே நேரத்தில் குருமூர்த்தியும் அதிமுக மூத்த தலைவர் சைதை துரைசாமியுடன் ராமதாஸை சந்தித்தது கவனிக்கத்தக்கது. இந்த சந்திப்புகள் சுமார் ஒரு மணி நேரம் நீடித்தன.
அதில் பல முக்கியமான விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வட மாவட்டங்களில் பாஜக வெற்றி வாய்ப்புகளை மேம்படுத்த பாமக முக்கிய பங்காற்றும் என்பதால், இந்த ஒத்துழைப்பு அவசியமாகிறது. அதிமுக, பாஜக, பாமக கூட்டணி உறுதி செய்யும் முயற்சி இப்போது தீவிரம் அடைந்துள்ளது.
இந்த சந்திப்புகள், ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டு வந்து, 2026 தேர்தலை முன்னிட்டு ஒருமித்த அணியை உருவாக்கும் என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.