
தூத்துக்குடியில் உள்ள விவசாயிகள் மத்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு திட்டங்களில் முழுமையாக பயன்பெற, தங்களது நில உடைமை விவரங்களை உரிய இடங்களில் பதிவு செய்ய வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்து விவசாயிகளும் ஆதார், கைபேசி எண் மற்றும் நில ஆவணங்களுடன் நிகரான தகவல்களை மாவட்டத்திற்குட்பட்ட வேளாண் முகாம்கள் மற்றும் இ-சேவை மையங்களில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். இது முற்றிலும் இலவசம் என்றும், எந்த வகையிலும் எந்த கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது என்றும் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் பிஎம் கிசான் நிதி உதவித் தொகை, சொட்டுநீர் பாசனம், வேளாண் உபகரணங்கள், இடுபொருட்கள் மற்றும் இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களில் இணைவதற்காக, நில உரிமைகளை ஆதாரமாக பதிவு செய்திருக்க வேண்டியது கட்டாயமாகும். தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் பி.எம்.கிசான் திட்டத்தில் 48,762 பேர் பயனாளிகளாக உள்ள நிலையில், 37,211 பேர் மட்டுமே உரிய பதிவுகளை முடித்துள்ளனர். மீதமுள்ள 11,551 பேர் உடனடியாக பதிவு செய்யப்பட வேண்டுமென மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொள்கிறது. இல்லையெனில், அடுத்த கட்ட நிதி அனுப்பப்படுவது நிறுத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக, தூத்துக்குடியில் உள்ள 10.79 இலட்சம் பட்டாக்களில் 75,156 மட்டுமே ஆன்லைனில் பதிவாகியுள்ளன. மீதமுள்ள 10 இலட்சம் பட்டா விவரங்களை பதிவு செய்யும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் தங்கள் பட்டா அல்லது கூட்டுபட்டா, ஆதார் மற்றும் கைபேசி எண்ணுடன் அருகிலுள்ள பொது சேவை மையங்கள் அல்லது வருவாய் அலுவலர்களை தொடர்பு கொண்டு தகவல்களை வழங்க வேண்டும். இதன்மூலம், அரசின் அனைத்து நலத்திட்டங்களும் நேரடியாக பயனாளிக்கு எட்டும்.
வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் நடத்தப்படும் முகாம்கள், இ-சேவை மையங்கள், மற்றும் பிற அதிகாரப்பூர்வ இடங்களில் விவசாயிகள் நேரில் சென்று தங்களது விவரங்களை வழங்கலாம். இது வரும் காலங்களில் அரசு திட்டங்களுக்கான அடிப்படை தளமாகவும், தனித்துவ அடையாள எண் பெறுவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாகவும் இருக்கும். எனவே, அனைத்து விவசாயிகளும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உடனடியாக பதிவு செய்யுமாறு மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.