குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் மலை ரயிலில் நிலச்சரிவு ஏற்பட்டதால் மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே இன்று (செப்டம்பர் 30) ஒருநாள் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
தீயணைப்புத் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையினரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மலை ரயிலில் மூன்று இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக ரன்னிமேடு ஆர்டர்லி ஹில்குரோவ் பகுதிகளில் மண் மற்றும் கற்கள் சரிந்து விழுந்ததால் குன்னூர் – மேட்டுப்பாளையம் இடையே இன்று ஒரு நாள் இயக்கப்படும் மலை ரயில் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் உதகை – குன்னூர் இடையே இயக்கப்படும் மற்ற ரயில்கள் இயக்கப்படுகின்றன.