திருமயம்: திருமயம் அருகே கடந்த வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கோட்டையூர் வீரமாகாளி அம்மன் கோயிலில் நடந்த விளக்கு பூஜை நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கோட்டையூர் வீரமாகாளி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றதையடுத்து, கடைசி வெள்ளியை முன்னிட்டு நேற்று முதல் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜை நிகழ்ச்சிகள் தொடங்கி பல்வேறு வகையான ஹோமம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில் பங்கேற்ற பெண்கள் வீட்டில் இருந்து தாம்பூலம், குத்துவிளக்கு ஏந்தி வந்த நிலையில், விழாவில் பங்கேற்ற பெண்களுக்கு விழாக் குழுவினர் பூஜைப் பொருள்கள், விளக்கெண்ணெய் வழங்கினர். இதையடுத்து சரியாக 7 மணிக்கு திருவிளக்கு பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்கள் அனைவரும் ஒரே நேரத்தில் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
இவ்வாறு அம்மனை வழிபடுவதன் மூலம் விவசாயம் செழித்து உலகில் அமைதி நிலவும், குடும்பத்தில் உள்ளோர் நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வார்கள் என்பது நம்பிக்கை. இந்நிகழ்ச்சியில் வீரமாகாளி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து, விழாவில் பங்கேற்ற பெண்கள் அம்மனை வழிபட்டனர். நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.