சென்னை: குழந்தைகள் என்றும் சொல்ல முடியாமல் குழந்தை நிலையில் இருந்து சற்று வளர்ந்து, பெரியவர்கள் என்றும் சொல்ல முடியாமல் இரண்டிற்கும் இடையில் உள்ள பருவம், டீனேஜ் என்னும் பதின் பருவம். இந்த பருவத்தை பிள்ளைகள் மற்றும் பெற்றோர் ஆகிய இருவரும் கவனமாக கையாள வேண்டும். இந்த பதின் பருவத்து பிள்ளைகளின் பழக்கத்தை சாமர்த்தியமாக பெற்றோர் எப்படி கையாளுவது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
அமைதியாக இருங்கள்
எந்த நேரத்திலும் நீங்கள் பின்பற்ற வேண்டிய ஒரு முக்கியமான அம்சம், அமைதியாக இருப்பது மட்டுமே. இரண்டு தரப்பினரும் வாதத்தை தொடர்ந்து கொண்டே இருந்தால் நிச்சயம் சண்டையில் தான் முடியும். கோபப்படுவது, கத்துவது, திட்டுவது போன்ற செயல்கள் இந்த சூழ்நிலையை இன்னும் மோசமானதாக மாற்றும். ஆகவே உங்கள் கோபத்தில் கட்டுப்பாடு இருக்கட்டும். எப்போதும் பதின்பருவத்து பிள்ளைகளை எளிதாக நிர்வகிக்க அமைதி மிகவும் அவசியம்.
மனம் விட்டு பேசுங்கள்
பதின்பருவத்து பிள்ளைகளிடம் வாதம் செய்வதை விடுத்து, அவர்களிடம் எப்போதும் பேசுவதற்கு முயற்சியுங்கள். அவர்களுடைய நடத்தைக்கான வேர் காரணம் என்ன என்பதை அவர்களுக்கு புரிய வைக்க முயற்சியுங்கள். அமைதியாக அவர்களை ஒரு இடத்தில் அமர வைத்து அவரிடம் மனம் விட்டு பேசுங்கள்.
ஆரோக்கியமான உரையாடல்
உங்கள் பதின் பருவத்து பிள்ளைகளிடம் அவர்களின் அன்றைய நாள் பற்றி பேசுங்கள். அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் என்னவென்று கேளுங்கள். சில நேரங்களில் பதின்பருவத்து பிள்ளைகளுக்கு அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை வெளியில் சொல்ல ஒரு சிறந்த வழி இல்லை என்ற எண்ணம் அவர்களுக்கு உருவாகலாம். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகலாம். இந்த எண்ணம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு மேலும் மேலும் அதிகரிக்கலாம். ஆகவே உங்கள் பிள்ளைகளிடம் எப்போதும் மனம் திறந்து பேசுங்கள். இதனால் உங்கள் மீது அவர்களுக்கு நிறைய நம்பிக்கை எழலாம். அவர்கள் சோகமாக இருக்கும் போது அல்லது தாழ்வாக உணரும் போது உங்களிடம் மறைக்காமல் கூற வேண்டும் என்ற எண்ணம் அவர்கள் மனதில் தோன்றும்.
அடிப்படை விதிகள்
இன்றைய பிள்ளை வளர்ப்பு முறை என்பது 30 வருடத்திற்கு முந்தைய பிள்ளை வளர்ப்பில் இருந்து மிகவும் வேறுபட்டதாக உள்ளது. தற்போது நவீன காலத்தில் பிள்ளைகள் பெற்றோரை நண்பர்களாக நினைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மரியாதை, பண்பு போன்ற விஷயங்கள் காணாமல் போய்விட்டன. ஆனால் பிள்ளை வளர்ப்பில் பழைய முறை என்பது முற்றிலும் சிறந்தது.
ஆகவே சில அடிப்படை விதிகளை வீட்டில் பின்பற்றுங்கள். பெற்றோருக்கான அடிப்படை மரியாதை எந்த நேரத்திலும் பின்பற்றப்பட வேண்டும். பெற்றோரை அவமரியாதையாக நடத்துவது, பெற்றோரை திட்டுவது போன்ற விஷயங்களுக்கு பெற்றோர் பொறுமை காப்பது அவசியமற்றது. இதனை பின்பற்றுவதன் மூலம் பிள்ளைகள் அவர்களுக்கான நிலையை அறிந்து நடந்து கொள்வார்கள்.