சென்னை: முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தின் ஒரு பகுதியாக, 1 கோடி குடும்பங்கள் செப்டம்பர் 15 அன்று உறுதிமொழி எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பாஜக பாசிச அரசியலை தடுக்கவும், மாநில உரிமைகளை நிலைநாட்டவும் இந்த உறுதிமொழி மிகப்பெரிய சமூக நிகழ்வாக அமைய உள்ளது. மாநிலம் முழுவதும் 68,000க்கும் மேற்பட்ட பூத் வாரியாக நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

ஓரணியில் தமிழ்நாடு இயக்கம், கடந்த ஜூன் மாதம் மதுரையில் நடந்த பொதுக்குழுவில் ஸ்டாலினால் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர், ஜூலை மாதம் சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்களை நேரடியாகச் சந்தித்து தொடங்கிய இந்த முயற்சியில், வீடு வீடாகச் சென்று மக்களை உறுப்பினர்களாக இணைத்த திமுக நிர்வாகிகள், ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்த்துள்ளனர்.
ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டின் மண், மொழி, மானத்தை காக்கும் உறுதிமொழி, அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 அன்று தமிழகம் முழுவதும் நடைபெறும் என தெரிவித்துள்ளார். இதில், தொகுதி மறுவரையறை, வாக்காளர் பட்டியல் மோசடி, நீட் தேர்வு, கல்வி நிதி, தமிழ் மொழி மற்றும் பண்பாட்டுக்கு எதிரான அநீதிகள் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு எதிராக மக்கள் ஒருங்கிணைந்து போராட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
பெண்கள், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட ஒவ்வொரு உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் என உறுதியேற்கும் இந்த நிகழ்வில், “தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்” என்ற கோஷம் ஒலிக்க உள்ளது. திமுக, அரசியல் விழிப்புணர்வை பரப்பும் இந்தப் பிரச்சாரத்தின் மூலம் மாநிலம் முழுவதும் கட்சியின் அடித்தளத்தை பலப்படுத்தும் நோக்கில் செயல்படுகிறது.