சென்னை: மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் 8-வது ஊதியக் குழு குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. 7-வது ஊதியக் குழுவின் காலம் 2025 டிசம்பரில் முடிவடைய இருப்பதால், அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்கும் முடிவு குறித்து அரசு முக்கிய பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அகவிலைப்படி திருத்தம் 2026 ஜனவரி-ஜூன் மாதங்களுக்கானதாக மார்ச் மாதத்தில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. இதன் மூலம் 7-வது ஊதியக் குழுவின் கீழ் கடைசி அகவிலைப்படி திருத்தம் வெளிவர இருக்கிறது. இதேவேளை, 8-வது ஊதியக் குழு நடைமுறைக்கு வரும் வரை அகவிலைப்படி அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஊழியர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
சமீபத்தில் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 58 சதவீதமாக உயர்ந்தது. இதன் அடிப்படையில், 2026 ஜனவரி மாதத்துக்கான புதிய அகவிலைப்படி 60.61 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என நிதி நிபுணர்கள் கணித்துள்ளனர். இதனால் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 முதல் 3 சதவிகிதம் வரையிலான கூடுதல் நன்மை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
மொத்தத்தில், 8-வது ஊதியக் குழு நடைமுறை தாமதமானால், அகவிலைப்படி திருத்தங்கள் தொடர்ந்து நடைபெறும். 2027 இறுதி வரை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை DA மற்றும் DR உயர்வு கிடைக்கும் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். இதனால் அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் வரவிருக்கும் அறிவிப்பை ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.