கடந்த ஆண்டு அக்டோபரில் டாஸ்மாக் நிர்வாகம், மதுபானக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்தால், சம்பந்தப்பட்ட கடையில் பணிபுரியும் ஊழியர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என சுற்றறிக்கை வெளியிட்டது. இதை எதிர்த்து தமிழ்நாடு டாஸ்மாக் மது விற்பனையாளர்கள் நலச் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை நீதிபதி டி.பாரத சக்கரவர்த்தி முன் நடந்தது. அப்போது மனுதாரர்கள் வாதிடுகையில், தனிப்பட்ட ஊழியர்கள் செய்த தவறுக்காக அனைத்து ஊழியர்களையும் உடனடியாக பணி நீக்கம் செய்தது சட்ட விரோதமானது. இதற்கு பதில் அளித்த டாஸ்மாக் நிர்வாகம், “அந்த கடையில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்று அதில் கிடைக்கும் தொகையை தங்களுக்குள் பிரித்துக் கொள்கின்றனர். அதனால் அவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.
மேலும், கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் வகையில், மார்ச் மாதம் முதல், மது விற்பனை முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, கியூஆர் குறியீடு முறை அமல்படுத்தப்படும். அதன் பிறகு, நிர்ணயிக்கப்பட்ட விலை மட்டுமே வசூலிக்கப்படும். கூடுதல் தொகை வசூலித்தால், சம்பந்தப்பட்ட ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.
அதைத்தொடர்ந்து, கூடுதல் விலைக்கு மதுபானம் விற்ற விவகாரத்தில் அனைத்து ஊழியர்களும் ஈடுபட்டதாக காரணம் இருந்தால் மட்டுமே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், டாஸ்மாக் நிர்வாகம் பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்ய வழக்கை முடித்து வைத்தார்.