சென்னை: சென்னை சென்ட்ரலில் பயணிகளின் உடமைகளை பாதுகாக்கும் வகையில் புதிய டிஜிட்டல் லாக்கர் அறை திறக்கப்பட்டுள்ளது. இந்த புதிய டிஜிட்டல் லாக்கர் அமைப்பு ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படுகிறது. போன்செல் என்ற நிறுவனம் மூலம் லாக்கர்களை அமைத்துள்ளனர். பயணிகளின் உடைமைகளின் அளவைப் பொறுத்து சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான சுமார் 80 லாக்கர்களை அமைத்துள்ளது. இது ரயில் நிலையத்தில் உள்ள லாக்கர் அறைக்கு டிஜிட்டல் மாற்றாகும்.
முன்பெல்லாம், பயணிகள் தங்கள் உடைமைகளை வைக்க பூட்டைப் பயன்படுத்துவார்கள். ஆனால் தற்போது இவை டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. இது பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும். பயணத்தின் போது பொருட்களை சேமிப்பதை லாக்கர்கள் எளிதாக்குகின்றன. குறிப்பாக பல்வேறு இடங்களுக்கு ரயிலில் பயணம் செய்ய வேண்டியிருந்தால், சில மணி நேர இடைவெளி இருக்கும்போது இடையில் அவற்றைப் பயன்படுத்தலாம். அதேபோல், புதிதாக ரயில் நிலையத்திற்கு வருபவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்த டிஜிட்டல் லாக்கர் உதவிகரமாக இருக்கும்.
எப்படி பயன்படுத்துவது? QR குறியீட்டை ஸ்கேன் செய்தால், லாக்கர் ஆப் திறக்கும். பின்னர், நீங்கள் லாக்கரின் அளவைத் தேர்ந்தெடுத்து நேரத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பிறகு, தொகை காட்டப்படும். ஜி.பே மூலம் பணம் செலுத்தலாம். பின்னர், லாக்கர் எண்ணுடன் கூடிய தனித்துவமான ஓடிபி பயணிகளின் செல்போனுக்கு அனுப்பப்படும். உடமைகளைத் திறக்கவும் மீட்டெடுக்கவும் ஓடிபி குறியீடு பயன்படுத்தப்படும். லாக்கரைப் பூட்ட குறியீடு மீண்டும் பயன்படுத்தப்படும்.