சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த பல்லாவரத்தை சேர்ந்த முரளி (59) என்பவரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது.
இதையடுத்து அவரது உடலுக்கு அரசு சார்பில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அஞ்சலி செலுத்தினார். மருத்துவமனை டீன் தேரணிராஜன், தமிழ்நாடு உறுப்பு மாற்று உறுப்பு செயலர் கோபாலகிருஷ்ணன், வருவாய் கோட்டாட்சியர் (வடக்கு) இப்ராகிம் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் அஞ்சலி செலுத்தினர். அப்போது அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
உடல் உறுப்பு தானத்தில் நாட்டிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. 2023 டிசம்பர் 23 அன்று செயல்தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பின்படி, உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசால் கவுரவிக்கப்படுகிறது.
ஆந்திரா, ஒடிசா போன்ற மாநிலங்களும் இதை அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றன. தற்போது உடல் உறுப்பு தானம் செய்த 250-வது மூளைச்சாவு அடைந்தவரின் உடலுக்கு அரசு மரியாதை அளித்துள்ளது.
இந்த 250 பேரிடம் இருந்து 68 இதயங்கள், 77 நுரையீரல், 193 கல்லீரல், 417 சிறுநீரகங்கள், 2 கணையம், 6 சிறுகுடல், 3 கைகள் என மொத்தம் 1,330 உறுப்புகள் தானமாக பெறப்பட்டு பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் திட்டம் 2008-ல் தொடங்கப்பட்டது. இதுவரை மூளைச்சாவு அடைந்த 1,976 பேர் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர். அதே நேரத்தில் சிறுநீரகம் 7,137, கல்லீரல் 401, இதயம் 87, கணையம் 4, நுரையீரல் 51, இதயம்- நுரையீரல் 23, கைகள் 25, சிறுகுடல் 3, சிறுநீரகம்- கல்லீரல் 37, கணையம் 45, சிறுநீரகம் என மொத்தம் 7,815 பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.
தமிழகத்தில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் மட்டும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்று வந்தது.
தற்போது இந்த சிகிச்சை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையிலும் செய்யப்படுகிறது. வரும் ஆண்டுகளில் திருநெல்வேலி, மதுரை, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இதற்கான உரிமம் பெறப்பட்டு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.