மதுரையில், நில அளவை அலுவலர்கள் மாநிலம் முழுவதும் முன்னெடுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது. நில அளவை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால், அலுவலக பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டன. தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள், களப்பணியாளர்களின் பணிகளை கணக்கில் கொண்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டுமெனவும், சிறப்புத் திட்டங்கள் மூலம் பெறப்படும் மனுக்கள் மற்றும் பணிகளுக்கு காலநிர்ணயம் வழங்காமல், ஊழியர்கள் மீது பெரும் பணிச்சுமையை சுமத்துவதை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
மேலும், நில அளவை அலுவலர்களின் பணிகளில் உள்ள முறைகள் மற்றும் செயல்பாடுகளை முறைப்படுத்த வேண்டும், தவறான நிலஅளவை பதிவேடுகள் மற்றும் களப்பணியாளர்களின் பணிகளின் சுமையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இடைக்கால ஊதியத்தில் பணி நியமனம் செய்யவும், புல உதவியாளர்களின் பணியிடங்களை தனியார் முகமையில் நியமிப்பதை கைவிட வேண்டும் எனவும் நில அளவை அலுவலர்கள் வலியுறுத்தினர்.
மதுரையில் நடந்த இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். இதில், நில அளவை அலுவலர்களுக்கு நிர்வாக மற்றும் நீதிமன்ற பயிற்சி வழங்க வேண்டும், மற்றும் நில அளவை துறையில் பொது மாறுதல் நடைமுறையை மாற்றி அமைக்க எடுக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த போராட்டம் காரணமாக மதுரையிலும் நில அளவை அலுவலகங்கள் காலியாக இருந்தன, மேலும் பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டன. நில அளவை அலுவலர்கள், தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், வரும் ஜனவரி 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்த போராட்டம் நடத்துமென எச்சரித்துள்ளனர்.