தமிழக அரசியலில் பலமுறை கட்சி மாறிய முன்னாள் எம்பி மைத்ரேயன் இன்று திமுகவில் சேர்ந்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இணைந்த அவர், அதிமுகவில் இருந்து விலகிய காரணத்தை பத்திரிகையாளர் சந்திப்பில் விளக்கினார்.
ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு கல்வி, பொருளாதாரம், சமூதாய முன்னேற்றம் என அனைத்து துறைகளிலும் முன்னணி மாநிலமாக இருப்பதை மத்திய அரசு அறிக்கை உறுதிப்படுத்தியதாக கூறினார். கருணாநிதியின் மாநில சுயாட்சி கொள்கையை ஸ்டாலின் நடைமுறைப்படுத்தி வருகிறார் என்றும், திமுக ஆட்சியே தொடரும் என்பதாக தெரிவித்தார்.

அதிமுகவின் தற்போதைய நிலை குறித்து அவர் கடும் விமர்சனம் செய்தார். பாஜகவுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி அமைத்தது, கட்சியின் முடிவுகள் டெல்லியில் இருந்து கட்டுப்படுத்தப்படுவது, சிலர் கட்சியை கைப்பிடியில் வைத்திருப்பது ஆகியவை அதிமுகவிலிருந்து விலகும் முக்கிய காரணங்கள் என கூறினார். தன்னைக் பயன்படுத்திக் கொள்ளாத சூழ்நிலையும் அதிமுகவிலிருந்து விலக வழிவகுத்ததாகவும் தெரிவித்தார்.
எதிர்வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 200 தொகுதிக்கு மேல் வெற்றி பெறும், ஸ்டாலின்தான் அடுத்த ஆண்டும் சுதந்திர தினத்தில் கோட்டையில் கொடியேற்றுவார் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். அதிமுக ஆட்சிக்கு வந்தால் பாஜகவின் பங்கு குறித்து மக்கள் யோசிப்பார்கள், ஆனால் திமுக ஆட்சி தொடர்வதற்கே மக்கள் வாக்களிப்பார்கள் என்றும் உறுதியாகக் கூறினார்.