தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை எழுப்பி தஞ்சையை ஆண்ட மாமன்னன் இராஜராஜசோழனின் 1040ஆவது ஆண்டு சதய விழா இன்றும், நாளையும் (1.11.25) தஞ்சை பெரியகோவில் வளாகத்தில் வெகு விமர்சையாக நடைபெறுகிறது, இவ்விழாவில் தொடக்க நாளான இன்று கலை பண்பாட்டுத் துறை, தஞ்சாவூர் மண்டலம் சார்பில், தஞ்சை அரண்மனை வளாகத்திலிருந்து கலை நிகழ்ச்சியோடு பேரணியாக வலம் வந்து தஞ்சை பெரிய கோவில் நந்தி மண்டபத்தில் நிறைவடைகிறது.
இப்பேரணியில் கொம்பு வாத்தியம், சிலம்பாட்டம், புலியாட்டம், கும்மிக் கோலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், நையாண்டி மேள நாதசுரம், தவில், கரகாட்டம், மாடு ஆட்டம், மயிலாட்டம், தேவலோக நடனங்களான, சிவன், பார்வதி, காளி, பச்சைக்காளி, பவளக்காளி, அரக்கன், கருப்பு, எமதர்மன் வேடங்களிலும், நாடகங்களில் வள்ளித் திருமண வேடத்திலும் வலம் வருதல் நிகழ்வும், பம்பை கைச் சிலம்பாட்டம், மற்றும் பெரியமேளம் போன்ற கலைகளில் 250க்கும் மேற்பட்ட கலைஞர்களைக் கொண்டு கலை ஊர்வல பேரணி நடைபெற்றது,
மேலும் அக்கால இராஜராஜ சோழனின் நகர்வலத்தை இக்கால தலைமுறைக்கு நினைவுப்படுத்தும் வகையில், குதிரை பூட்டப்பட்ட தங்கரதம், இராஜஇராஜசோழன் வேடம், அமைச்சர்கள் வேடம், வாயில் காவலர்கள் வேடம் ஆகியவற்றில் வேடமிட்டு கலைஞர்கள் பங்குபெறும் ஊர்வல நிகழ்ச்சியும் நடைபெற்றது, இந்நிகழ்ச்சியை எம்பி முரசொலி, எம்எல்ஏ சந்திரசேகரன்,மேயர் இராமநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர், இதில் சதய விழா குழு தலைவர் செல்வம், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.