ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், பாகலூர், பேரிகை, கெலமங்கலம், உத்தனப்பள்ளி, தேன்கனிக்கோட்டை, தளி, சூளகிரி, ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பல ஆண்டுகளாக விவசாயிகள் மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் திருவிழா மற்றும் கோவில் திருவிழாவின் போது விற்பனையை மையமாக வைத்து, பருவத்திற்கு ஏற்ப விவசாயிகள் பல்வேறு பூக்களை பயிரிடுகின்றனர்.
குறிப்பாக, 5 ஆயிரம் ஹெக்டேரில் சாமந்தி சாகுபடி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு வரலட்சுமி விரதம், விநாயகர் சதுர்த்தியின் போது பூ விளைச்சல் அதிகரித்து, விலையும் உயர்ந்தது. தற்போது தொடர் மழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் பூக்கள் அனுப்ப முடியாத நிலை உள்ளது.
சாமந்தி பூக்களை கேட்க யாரும் இல்லாததால், பூக்கள் பறிக்கப்படாமல் தோட்டங்களில் கிடக்கிறது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். இது குறித்து ஓசூர் பகுதி விவசாயிகள் கூறியதாவது:- ஆயுதபூஜை, தீபாவளிக்கு பின், சாமந்தி பூவின் விலை குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், சாமந்தி பூக்களை தரத்திற்கு ஏற்ப கிலோ ₹15 முதல் ₹20 வரை விற்பனை செய்து தோட்டங்களில் இருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்தனர்.
இதனால், எங்களுக்கு பராமரிப்பு செலவு மற்றும் அறுவடை கூலி கிடைப்பதில்லை. இதனால் அறுவடை தாமதமாகி சாமந்தி பூக்கள் உதிர்ந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் ஓசூர் பகுதி விவசாயிகள் வயல்களில் சாமந்தி பூக்களை பறிக்கவில்லை. பல்வேறு காரணங்களால் ஆண்டுதோறும் வருவாய் இழப்பை சந்திக்கும் மலர் சாகுபடிக்கு மானியம் வழங்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றார்.