சென்னை: மழையின் தாக்கத்தை பொறுத்து மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என்றும், வழக்கம் போல் பறக்கும் ரயில் பாதையில் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னையில் நேற்று கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாநகர பேருந்து சேவையும் பாதிக்கப்பட்டது.
ரயில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால், எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரயில்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. இருப்பினும், மெட்ரோ ரயில்கள் பெரிய அளவில் பாதிப்பு இல்லாமல் இயங்கின.
இதனால், பயணிகள் நிம்மதியாக பயணம் செய்தனர். இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், “மெட்ரோ ரயில் சேவையில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை.
மெட்ரோ ரயில்கள் முழு அளவில் இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுவது குறித்து உடனடியாக பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மெட்ரோ ரயில்களில் பயணிகள் வழக்கத்தை விட குறைவாகவே பயணிக்கின்றனர்.
இருப்பினும் பயணிகள் சேவையில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மெட்ரோ ரயில்களை எந்த குறையும் இன்றி இயக்கி வருகிறோம். புதன்கிழமையும் (இன்று) மெட்ரோ ரயில் சேவை வழக்கம் போல் இயக்கப்படும்,” என்றார்.
சென்னையில் நேற்று மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. சில இடங்களில் தண்டவாளத்தில் மழைநீர் தேங்கியதால் மின்சார ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன.
மழையின் தாக்கத்தைப் பொறுத்து புறநகர் மின்சார ரயில் சேவையில் புதன்கிழமை (அக்டோபர் 16) மாற்றம் செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும், சிந்தாதிரிப்பேட்டை – வேளச்சேரி வழித்தடத்தில் வழக்கம்போல் ரயில் சேவை இயக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.