சென்னை: சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் 116.1 கி.மீ., தூரத்திற்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லி செல்லும் 4-வது வழித்தடம் (26.1 கி.மீ.) ஒன்றாகும். கலங்கரை விளக்கத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வரை ஒரு சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை உயர்த்தப்பட்ட சாலையாகவும் உள்ளது.
பல்வேறு இடங்களில் சுரங்கப்பாதை மற்றும் உயர்த்தப்பட்ட சாலை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, போரூர் – பூந்தமல்லி பைபாஸ் இடையே பல இடங்களில் பொறியியல் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த வழித்தடத்தில் மேம்பால சாலை அமைக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக தண்டவாளங்கள் மற்றும் மின்கம்பங்கள் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்த வழித்தடத்தின் ஒரு பகுதியாக, பூந்தமல்லி பணிமனை முதல் முல்லை தோட்டம் வரை 2.5 கி.மீ., தூரம் சோதனை ஓட்டம் மார்ச் 20ல் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதையடுத்து பூந்தமல்லி – போரூர் சந்திப்பு மெட்ரோ ரயில் நிலைய வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நேற்று தொடங்கியது. இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குநர் டி.அர்ஜுனன், நிதி இயக்குநர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சிஸ்டம்ஸ் அண்ட் ஆபரேஷன்ஸ் இயக்குநர் மனோஜ் கோயல், முதன்மை பொது மேலாளர்கள் ஏ.ஆர். ராஜேந்திரன், (மெட்ரோ ரயில், சிக்னலிங் மற்றும் தொலைத்தொடர்பு), எஸ். அசோக் குமார், (தடம் மற்றும் மேல் கட்டமைப்பு), ஆலோசகர் எஸ். ராமசுபு (மெட்ரோ ரயில் செயல்பாடுகள்) மற்றும் பலர்.
இது குறித்து பேசிய சென்னை மெட்ரோ ரயில் கழக நிர்வாக இயக்குனர் எம்.ஏ.சித்திக், “மெட்ரோ ரயில் திட்ட முன்னேற்றத்தில் இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல். மக்கள் பயன்பாட்டிற்கு திட்டத்தை செயல்படுத்துவதில் நாங்கள் தொடர்ந்து முன்னேறி வருகிறோம்” என்றார். சென்னை மெட்ரோ ரயில் கழக அதிகாரிகள் கூறியதாவது:- பூந்தமல்லி பைபாஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து போரூர் சந்திப்பு மெட்ரோ ரயில் நிலையம் வரை சுமார் 10 கி.மீ., தூரத்திற்கு இந்த உயர்த்தப்பட்ட பாதை பூந்தமல்லி மெட்ரோ பணிமனையுடன் இணைக்கப்பட்டுள்ளது. பூந்தமல்லி மெட்ரோ பணிமனை தற்போதைய சோதனை மற்றும் செயல்பாடுகளுக்கான ஒருங்கிணைப்பு மையமாக இருக்கும் என்றார்கள்.