கோவை: சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததால், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு மலை ரயில் சேவை இன்று (ஆகஸ்ட் 7) காலை 7.10 மணிக்கு வழக்கம் போல் தொடங்கியது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு தினமும் காலை 7.10 மணிக்கு நீலகிரி மலை ரயில் இயக்கப்படுகிறது.
நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த மலை ரயிலில் பயணம் செய்யும் போது நீலகிரியின் இயற்கை அழகை ரசிக்க நாடு மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்நிலையில், கடந்த 1ம் தேதி அதிகாலை பெய்த கனமழையால், ஹில்குரோ-அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டது.
இதனால் கடந்த 1ம் தேதி மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து சுற்றுலா பயணிகளுடன் புறப்பட்ட மலை ரயில் மலையடிவார பகுதியான கல்லாறு ரயில் நிலையத்திற்கு சென்று மீண்டும் மேட்டுப்பாளையம் ஸ்டேஷனுக்கு கொண்டு வரப்பட்டு மற்ற வாகனங்கள் மூலம் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து, நிலச்சரிவு சீரமைப்பு பணி காரணமாக நேற்று 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை 6 நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 6) மாலை சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 7) காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு மலை ரயில் சேவை வழக்கம்போல் தொடங்கியது. இதனால் உலக பாரம்பரிய சின்னமான மலை ரயிலில் பயணம் செய்ய ஏற்கனவே முன்பதிவு செய்து காத்திருந்த சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்