மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு 20 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி காவிரி ஆற்றில் எந்த நேரத்திலும் உபரி நீர் திறக்கப்படலாம் என்பதால் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் கபினி, கேஆர்எஸ் அணைகள் நிரம்பியுள்ளன. அந்த அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் கடந்த 2 வாரங்களாக காவிரியில் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வினாடிக்கு 1,52,903 கன அடியாக இருந்த நிலையில், இன்று (திங்கட்கிழமை) காலை நீர்வரத்து வினாடிக்கு 1,53,091 கன அடியாக அதிகரித்தது.
நேற்று மாலை 112.26 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் மாலையில் 116.36 அடியாக உயர்ந்தது. அதேபோல் நீர் இருப்பு 81.67 டிஎம்சியில் இருந்து இன்று 87.78 டிஎம்சியாக அதிகரித்துள்ளது. நேற்று அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 12,000 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இன்று காலை முதல் படிப்படியாக 20,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்ட இன்னும் 3.50 அடி பாக்கி உள்ளது. அணையின் முழு கொள்ளளவை எட்டும் வகையில் மேலும் 5 டிஎம்சி தண்ணீர் அணையில் சேமிக்கப்படும். மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் விரைவில் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும்.
அணை நிரம்பினால் உபரி நீரை வெளியேற்றவும், காவிரியில் வெள்ளம் வந்தால் கண்காணிக்கவும் நீர்வளத்துறை மூலம் அணை வளாகத்தில் வெள்ளக் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், 11 மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ”இன்று காலை 8 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் 116.36 அடியாக உயர்ந்துள்ளது.தென்மேற்கு பருவமழை பெய்தால் ஓரிரு நாட்களில் மேட்டூர் அணை 120 அடியை எட்டும்.
உபரி நீர் எந்த நேரத்திலும் காவிரி ஆற்றில் திறந்து விடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, காவிரி கரையோரம், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். உடைமைகளுக்கு பாதுகாப்பு உட்பட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்,” என்றார்.