ஊட்டி : ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கோடை சீசனுக்காக லட்சக்கணக்கான மலர் நாற்றுகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வோர் ஆண்டும், கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து குளிர்ச்சியான வானிலையை அனுபவிக்கின்றனர். இதனை காண சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவதால், அவர்களை மகிழ்விக்கும் வகையில் ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனைக் காண அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருவதால், தோட்டக்கலைத் துறையினர் தாவரவியல் பூங்காவில் பல்வேறு வகையான பூக்கள் பூத்து கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் லட்சக்கணக்கான மலர்ச் செடிகளை முன்கூட்டியே நடவு செய்ய உள்ளனர். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நாற்றுகள் உற்பத்தி செய்யப்படும். நாற்றுகள் உற்பத்தியானதும், டிசம்பர் கடைசி வாரத்தில் நடவுப் பணி தொடங்கும். பின்னர், இந்த மலர் செடிகளின் வகை மற்றும் பூக்கும் நேரத்தை பொறுத்து, மார்ச் வரை நடவு பணி தொடரும்.
இம்முறை கடந்த மாதம் சென்னையில் மலர் கண்காட்சி நடைபெற்றது. இதற்காக தாவரவியல் பூங்காவில் பல லட்சம் தொட்டிகள் தயார் செய்யப்பட்டன. இதனால் கோடை சீசன் காண நாற்றுகள் உற்பத்தி மற்றும் நடவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது, நாற்றுகள் உற்பத்தி மற்றும் நடும் பணி நடந்து வருகிறது. பூங்காவில் உள்ள நாற்றங்கால் பாத்திகளில் நாற்றுகள் உற்பத்தி செய்யும் பணியில் தோட்டக்கலைத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பல லட்சம் மலர் நாற்றுகள் தயாரிக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது. இதற்கான விதைப்பு பணி தற்போது தாவரவியல் பூங்கா நாற்றங்காலில் நடந்து வருகிறது. நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டவுடன், அவை பூங்காவில் உள்ள பல்வேறு பாத்திகளில் நடப்படும். மேலும், இந்த மலர் நாற்றுகள் பல ஆயிரம் தொட்டிகளில் நடப்படும்.