சென்னை கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் கடந்த 2023ஆம் ஆண்டு முடிவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. அதன் பிறகு தொடர்ந்து பல வகையான புகார்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. புறநகர் மற்றும் ஆம்னி பேருந்துகள் போதுமான அளவில் இல்லை என்பதே பெரும்பாலான பயணிகளின் குறைச்சொல். சமீபத்தில் ஜூன் 4, 5, 6 தேதிகளில் பண்டிகை, வார இறுதி மற்றும் முகூர்த்த நாட்கள் ஒரே நேரத்தில் வந்ததாலும், கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள் போதாத நிலை ஏற்பட்டது.

இது தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவியதால், பொதுமக்கள் கோபம் தெரிவித்தனர். நெரிசல், காலதாமதம், போதிய பதிலளிக்காத அதிகாரிகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் சிரமப்பட்ட சம்பவங்கள் கண்டிப்புக்கு உரியது. பயணிகள் குறையைக் கூறிய நிலையில், அரசு தரப்பில் 11,026 பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும், 6 லட்சம் பயணிகள் பயணித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பயணிகள் குறை தீரவில்லை.
இந்த தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணமாக ஜி.எஸ்.டி சாலையில் நடக்கும் மேம்பாலப் பணிகள் குறிப்பிடப்படுகிறது. மதுராந்தகம் மற்றும் மேல்மருவத்தூர் சாலையில் நடக்கும் பணிகள் காரணமாக சர்வீஸ் சாலைகள் சுருங்கியதால், ஒரு வழித்தடமாக பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், அனைத்து போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர்களுடன் ஜூன் 9ஆம் தேதி ஆலோசனை நடத்தினார். இதில் கிளாம்பாக்கத்தில் தற்போது நிலவும் பிரச்சினை, மேல்சாலை பணிகள் எப்போது முடியும், எந்த வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகள் தேவை என்பன பற்றி விவாதிக்கப்பட்டது. விரைவில் பேருந்து வசதி மேம்படும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.