தமிழகத்தில் உள்ள 54,483 அங்கன்வாடி மையங்களில் 501 மையங்கள் மூடப்பட்டதாக வெளியாகிய தகவல் தவறானது என்று மகளிர் உரிமை மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் சில நாளிதழ்கள் வெளியிட்ட செய்திகளில், ஊழியர்கள் பற்றாக்குறையால் பெற்றோர்கள் குழந்தைகளை அனுப்ப தயங்குவதாகவும், 501 மையங்கள் இந்த ஆண்டு மூடப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் இந்த தகவல் உண்மைக்கு புறம்பானது என அமைச்சர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

அவரது விளக்கத்தின்படி, 2021ல் திமுக ஆட்சி பொறுப்பேற்றபோது 54,439 அங்கன்வாடி மையங்கள் இருந்தன. கடந்த நான்கு ஆண்டுகளில் 44 புதிய மையங்கள் திறக்கப்பட்டு, தற்போது மொத்தம் 54,483 மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அரசு, நகர்பகுதிகளில் அதிக மக்கள் தொகை காணப்படும் பகுதிகளுக்கு மையங்களை மாற்றி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இது மூடல் அல்ல, இடமாற்றம் என அவர் கூறினார்.
மேலும், மலைப் பகுதிகள் மற்றும் அணுகல் கடினமான இடங்களில் புதிய குறு அங்கன்வாடி மையங்களைத் தொடங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக கடந்த ஆறு மாதங்களாக தகவல் சேகரிக்கப்பட்டது.
7,783 காலிப் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மாவட்டங்களில் நேர்முகத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அனைத்து காலிப் பணியிடங்களும் நிரப்பப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
தவறான தகவல்களின் அடிப்படையில் வெளியிடப்பட்ட பா.ஜ. தலைவர்கள் நயினார் நாகேந்திரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் அறிக்கைகள் உண்மைக்கு மாறானவை எனவும் அமைச்சர் விளக்கியுள்ளார்.