சென்னை: அமைச்சர் தகவல்… அரசு மருத்துவமனைகளில் டேக் கட்டும் நடைமுறை செயல்பாட்டுக்கு வரும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை, கிண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டாக்டர் பாலாஜியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: டாக்டர் பாலாஜியின் உடல்நிலை நன்றாக உள்ளது. டாக்டருக்கு பொருத்தப்பட்ட பேஸ்மேக்கரின் செயல்பாடு குறித்து கேட்டறியப்பட்டது.
இன்று மதியத்திற்குப் பிறகு, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து தனியறைக்கு மாற்றப்படுவார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட விக்னேஷ் என்ற இளைஞர் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவோர், ‘காவல் உதவி’ செயலியை பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் டேக் கட்டும் நடைமுறை செயல்பாட்டுக்கு வரும். சிவப்பு நிறம் – தீவிர சிகிச்சை பிரிவு, மஞ்சள் நிறம்- சிறப்பு மருத்துவ சிகிச்சை பிரிவு, பச்சை நிறம்- சிறப்பு அறுவை சிகிச்சை பிரிவு, நீல நிறம் – பொது மருத்துவம்
ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளிகள், உறவினர்களின் கையில் டேக் கட்டும் நடைமுறை உள்ளது. டேக் கட்டும் நடைமுறை, படிப்படியாக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் செயல்பாட்டுக்கு வரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.