
விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை அமைச்சர் பொன்முடி இன்று நேரில் பார்வையிட்டு பொதுமக்களின் கோரிக்கைகளை தொலைபேசியில் கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறியதாவது:- விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சரி செய்ய, மின்வெட்டு மற்றும் போக்குவரத்து வசதிகளை சரி செய்ய, முதல்வர் உத்தரவின் பேரில், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் வர உள்ளனர். மாவட்டத்தில் கனமழையால் 11 இடங்களில் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன. 51 இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. 23 மரங்கள் விழுந்தன. இதில் 18 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள மரங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது.

2 ஆடுகள், 5 மாடுகள் இறந்துள்ளன. மனித இழப்பு எதுவும் ஏற்படவில்லை. 21 புயல் முகாம்களில் 1,281 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சில முகாம்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. குறிப்பாக செஞ்சி தாலுகாவில் 43 பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
எனவே, மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்ள அனைத்து துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். அப்போது எம்எல்ஏக்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா, மாவட்ட பஞ்சாயத்து குழு தலைவர் ஜெயச்சந்திரன், நகர் மன்ற தலைவர் தமிழ்செல்வி பிரபு, மாவட்ட ஆட்சியரின் தனி உதவியாளர் யோகஜோதி, விழுப்புரம் கோட்டாட்சியர் முருகேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.