2025 ஆம் ஆண்டின் பொங்கல் பரிசுத் தொகுப்பின் டோக்கன்கள் இன்று முதல் வீடுகளுக்கு விநியோகப்படுகின்றன. முதல்வர் மு.க. ஸ்டாலின் பொங்கல் பரிசுத் தொகுப்பை அறிவித்துள்ள நிலையில், தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்பட உள்ளது. இந்த தொகுப்புகள் நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும்.
பொங்கல் தொகுப்பு விநியோகத்தை மேற்பார்வை செய்ய, உணவுத்துறை அமைச்சர் அர. சக்கரபாணி, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, விநியோகத்தில் தரத்தை உறுதிசெய்யும் நடவடிக்கைகளை அறிவித்தார். அவர் கூறுகையில், “பச்சரிசி மற்றும் சர்க்கரையின் தரத்தை உறுதி செய்ய வேண்டும். மேலும், கரும்பின் தோகையை வெட்டாமல் முழு கரும்பும் அனைவருக்கும் வழங்க வேண்டும்” எனச் சுட்டிக்காட்டினார்.
கூட்டுறவுத்துறையினருடன் இணைந்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் பொருட்களின் தரத்தை சீரான முறையில் பரிசோதித்து, பொதுவினியோக அங்காடிகளில் பொருட்களின் இருப்பையும், விநியோக நிலைகளையும் கவனமாக கண்காணிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், புதிய குடும்ப அட்டைகள் பெற விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு, உடனே தகுதி பரிசீலனை செய்யப்பட்டது. அத்துடன், குடும்ப அட்டைகள் விரைந்து வழங்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் கூறினார். இந்தக் கூட்டத்தில், துறை செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் மற்றும் பல அதிகாரிகள் பங்கேற்றனர்.