சென்னை: சென்னையைச் சேர்ந்த பிரபல யூடியூபர் இர்பான்-ஆசீபாவுக்கு கடந்த ஜூலை 24-ம் தேதி தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறக்கும்போது அறுவைச் சிகிச்சை அறையில் குழந்தையின் தொப்புள் கொடியை கத்தரிக்கோலால் வெட்டிய வீடியோவை தனது யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் வீட்டில் இருந்து ஜூஸ் குடித்துவிட்டு மருத்துவமனைக்கு வருவது, மருத்துவமனையில் பிரசவத்திற்கு முந்தைய சிகிச்சை, பிரசவத்தின்போது நடக்கும் சம்பவங்கள் என அனைத்தையும் வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார். இர்பானின் இந்த செயலுக்கு மருத்துவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே, கடந்த ஆண்டு, துபாயில் இர்ஃபான் தனது கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை சோதித்து, அது தொடர்பான வீடியோவை வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வீடியோ தொடர்பாக பதில் அளிக்குமாறு மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை இயக்குனரகம் (டிஎம்எஸ்) இர்பானுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதையடுத்து அந்த வீடியோவை யூடியூப்பில் இருந்து நீக்கினார். அவரது செயலுக்கு மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிடுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதுவரை மன்னிப்புக் கேட்கும் வீடியோவை வெளியிடாத இர்ஃபான், பிரசவத்தின்போது தனது மனைவி குழந்தையின் தொப்புள் கொடியை கத்தரிக்கோலால் வெட்டிய வீடியோவை வெளியிட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இந்த விவகாரத்தில் யூடியூபர் இர்ஃபான், மருத்துவர் மற்றும் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. தமிழக சுகாதாரம் மற்றும் நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
குழந்தையின் தொப்புள் கொடியை அறுத்து வீடியோ வெளியிட்ட இர்பானை மன்னிக்க முடியாது. இந்த முறை இர்ஃபான் மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம். அவர் மன்னிப்பு கேட்டாலும் அதை ஏற்க முடியாது. இர்பான் மீது நடவடிக்கை எடுப்பதில் எந்த அரசியல் பின்னணியும் இல்லை. டாக்டர் நிவேதிதா மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர் பயிற்சி செய்ய தடை விதிக்க மருத்துவ கவுன்சில் பரிந்துரை செய்யும். தவறு செய்பவர்களை அரசு நிச்சயம் தண்டிக்கும்” என்றார்.