திண்டுக்கல் அசோக் நகரில் உள்ள தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் இன்று காலை 7.30 மணி முதல் அமலாக்கத்துறை சோதனை தொடங்கியது. இவரது மகன் செந்தில்குமார் எம்எல்ஏ மற்றும் மகள் இந்திராணி வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சுமார் பத்து மணி நேரமாக நீடித்த சோதனையில், அமைச்சர் வீட்டின் ஆவணங்கள், வாகனங்கள் என பல்வேறு பொருட்கள் பரிசோதிக்கப்பட்டன. இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

சோதனைக்கிடையில், ஐ.பெரியசாமியின் வாகனத்தை சோதனை செய்ய விடாமல் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் அங்கிருந்த திமுக தொண்டர்கள் இடையே பதட்டம் நிலவியது.
மேலும், அதிரடியான சம்பவமாக, திமுக தொண்டர் ஒருவர் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். ஆனால் அருகில் இருந்தவர்கள் உடனடியாக தடுத்ததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
அமலாக்கத்துறை அதிகாரிகள் நால்வர் சோதனை மேற்கொண்டு வர, அவர்களுக்கு பாதுகாப்பாக எட்டு சிஆர்பிஎப் போலீசார் துப்பாக்கியுடன் களமிறங்கினர். இதனால் அந்த பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையம் போடப்பட்டது.
இச்சோதனை காரணமாக அசோக் நகரில் பொதுமக்கள் அச்சத்துடன் கூடினார்கள். பலரும் சோதனை நடைபெறும் இடத்தை காணத் திரண்டனர். திண்டுக்கல் முழுவதும் சோதனை செய்தி பரவியதால் அரசியல் ரீதியாகவும் அதிர்ச்சி நிலை உருவாகியுள்ளது.
அமைச்சர் வீட்டிலும், அவரது குடும்பத்தினரின் வீடுகளிலும் தொடர்ந்து நடைபெறும் சோதனை இன்னும் நிறைவடையவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.