காஞ்சிபுரம்: தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லாத காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். ரூ.4.80 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 9 புதிய கட்டிடங்கள் திறப்பு விழா நடந்தது.
மக்கள் நலத்துறை மூலம் காஞ்சிபுரம் ஒன்றியம் திருப்புட்குழி ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமை வகித்தார். இதில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, மக்கள் நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்தனர். அப்போது, சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் ரூ.42.25 கோடியில் பல்வேறு மருத்துவக் கட்டடங்கள், உயர்தர மருத்துவக் கருவிகள் திறக்கப்பட்டுள்ளன. இதில், 6 நகர்ப்புற சுகாதார நிலைய கட்டிடங்கள் ரூ. 1.50 கோடி, 8 துணை சுகாதார நிலைய கட்டிடங்கள் ரூ. 2 கோடியிலும், 7 ஆரம்ப சுகாதார நிலையங்கள் ரூ. 2.75 கோடியில் திறக்கப்பட்டு, புறநோயாளிகள் பிரிவு, செவிலியர் குடியிருப்புகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பணிகள், கூடுதல் கட்டடங்கள் திறக்கப்பட்டு, மக்கள் பயனடைந்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து, ரூ.4.80 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 9 மருத்துவமனை கட்டிடங்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ளது.
மேலும், 29 மருத்துவக் கட்டடங்களுக்கான பணிகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ. 299.88 கோடி ரூபாய். இதில், காரப்பேட்டையில் உள்ள அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனைக்கு ரூ.218.40 கோடி மதிப்பீட்டில் தரை மற்றும் 5 மாடி புற்றுநோய் மறுவாழ்வு மைய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் கர்ப்பிணிப் பெண்களுக்கு மக்கள் நலப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்துப் பெட்டிகள் மற்றும் மருந்துப் பெட்டிகள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:-
காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லாத 6 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நாய்க்கடி மற்றும் பாம்பு கடிக்கான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தென்காசியில் அரசுத் திட்டத்துக்கு பணம் வசூலித்ததாகக் கிடைத்த குரல் பதிவு யார் என்பது குறித்து விசாரிக்க போலீஸில் புகார் அளித்துள்ளோம்.
பணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினர் க.செல்வம், உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர், காஞ்சிபுரம் எம்எல்ஏ சி.வி.எம்.பி. எழிலரசன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் படப்பை ஆ.மனோகரன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் எம்.மகாலட்சுமி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.