சென்னை: தமிழக அரசின் நிதியுதவியுடன் இந்திய திரைப்பட விமர்சகர்கள் சங்கம் சார்பில், 22-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நடந்தது. தகவல் துறை அமைச்சர் மு. பெ. சுவாமிநாதன் நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் விழாவை தொடங்கி வைத்தார். விழாவில் அமைச்சர் பேசியதாவது:-
சென்னை சர்வதேச திரைப்பட விழா இந்தியாவின் முன்னணி திரைப்பட விழாவாக உருவெடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 2008-ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி முதன் முதலாக திரைப்பட விழாவுக்கு நிதியுதவி வழங்கினார். 2023-ல் முதல்வர் மு.க. ஸ்டாலின் நிதியுதவியை ரூ. 85 லட்சமாக உயர்த்தி வழங்கினார். அதேபோல், கோவா திரைப்பட விழாவுக்கான நிதியுதவி ரூ. 15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு திரைத்துறையினருக்கு பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. திரைப்படத்துறை நலனுக்காக 27 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். இந்த வாரியம் வழங்கும் நலத்திட்ட உதவிகளை முறையாக பயன்படுத்த வேண்டும். நிலுவையில் உள்ள திரைப்பட விருதுகள் மற்றும் சின்னத்திரை விருதுகள் வழங்க தேர்வுக் குழு அமைக்கப்பட்டு விருது பெற்றவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் 150 ஏக்கர் பரப்பளவில் ரூ.50 கோடி செலவில் நவீன திரைப்பட நகரம் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.
இதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இது தொடர்பாக நானும் துணை முதல்வரும் கடந்த வாரம் ஆய்வுக் கூட்டம் நடத்தினோம். விரைவில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு ஒப்பந்தம் கோரி பணிகள் முடிக்கப்படும். எம்ஜிஆர் திரைப்படக் கல்லூரியில் அதிநவீன திரைப்பட ஸ்டுடியோக்கள் ரூ. 40 கோடி மதிப்பீட்டில் தொடங்கவுள்ளோம். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் இந்திய திரைப்பட விமர்சகர்கள் சங்கத் தலைவர் சிவன் கண்ணன், துணைத் தலைவர் ஆனந்த் ரங்கசாமி, பொதுச் செயலாளர் ஏவிஎம்கே சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். சென்னை சர்வதேச திரைப்பட விழா டிச.19 வரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 180 படங்கள் திரையிடப்படும். விருது பெற்ற படங்கள் மட்டுமின்றி, பிரபல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட படங்களும் திரையிடப்படும். விழா முடிவில் சிறந்த படங்களுக்கு விருதுகள் வழங்கப்படும். மேலும், திரைப்படத்துறை அதிகாரிகளின் பார்வைகள், பயிற்சி வகுப்புகள் மற்றும் கலந்துரையாடல்களும் நடைபெற்றன.