ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை வீட்டிலேயே பிரித்து அகற்றுவதற்கான விழிப்புணர்வு பாடலை துவக்கி வைத்தார். தமிழகத்தில் தூய்மை பாரத் திட்டத்தை மேலும் செயல்படுத்த, பேட்டரியில் இயங்கும் வாகனங்களைப் பயன்படுத்தி திடக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த சேகரிப்பு குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கவும், வீட்டில் உள்ள திடக்கழிவுகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக பிரித்து அகற்றுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பேட்டரியில் இயங்கும் வாகனங்களில் திடக்கழிவு விழிப்புணர்வு பாடலை ஒலிபரப்புவதற்கு ஏற்கனவே தயார் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 1.25 கோடி கிராமப்புற குடியிருப்புகளில், 84,651 தொழிலாளர்கள், குப்பைகளை அதன் வகைக்கு ஏற்ப சேகரித்து, பிரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக பேட்டரியில் இயங்கும் 8,315 வாகனங்களும், 1,291 டிராக்டர்களும், 372 இதர வாகனங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த அனைத்து ஊராட்சிகளிலும் பேட்டரியில் இயங்கும் வாகனங்களில் ஒலிபரப்புவதற்கு வசதியாக, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் பாடலைத் தொடங்கி வைத்தார். இதன் மூலம் தமிழகத்தில் உள்ள 12,525 ஊராட்சிகளிலும் பாடல் ஒலிபரப்பப்பட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.