திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து பக்தர்கள் வழக்கமாக கடலுக்குள் நுழையும் பகுதியில் கடல் அரிப்பு அதிகரித்து சுமார் 7 அடிக்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் சுமார் 300 மீட்டர் தூரம் மிகவும் சிரமத்துடன் கடந்துதான் கடலில் குளித்து வருகின்றனர். கடற்கரையின் அளவும் சுருங்கி வருவது பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எனவே, கடல் அரிப்பு குறித்து அரசு உரிய ஆய்வு நடத்தி கடற்கரையையும், கோயிலையும் பாதுகாக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி எம்பி கனிமொழி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மீன்வளத்துறை-மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று காலை திருச்செந்தூர் முருகன் கோவில் பகுதியில் கடல் அரிப்பை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, கடற்கரையில் இறங்கி அரிப்பு ஏற்பட்டு பாறைகளை தொட்டு பார்த்தனர்.
பின்னர், கனிமொழி எம்.பி., நிருபர்களிடம் கூறுகையில், ‘இந்தாண்டு நடக்கும் கோவில் கும்பாபிஷேகத்துக்கு முன், துறை சார்ந்த வல்லுனர்கள் மற்றும் ஐ.ஐ.டி., நிபுணர்களை கொண்டு நிரந்தர தீர்வு காண திட்டம் வகுக்கப்படுகிறது. இதை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்வதாக முதல்வர் மு.க. ஸ்டாலின், விவாதித்து, தேவையான நிதி ஒதுக்கீட்டை பெற்று, கடல் அரிப்பை தடுக்க நிரந்தர தீர்வு அறிவிக்க வேண்டும்.
இந்த கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ள சிற்பங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிற்பங்களாக இருந்தால், அவற்றை பாதுகாக்க நிச்சயம் முயற்சி மேற்கொள்ளப்படும்’ என்றார்.