சிவகங்கை: மஞ்சுவிரட்டு முன்னேற்பாடுகள் ஆய்வு… சிவகங்கை மாவட்டம், கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் ,சிறாவயல் கிராமத்தில் நடைபெறவுள்ள மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தொடர்பாக நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், சிறாவயல் கிராமத்தில், பொங்கல் திருநாளையொட்டி, நடைபெற உள்ள மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தொடர்பாக, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தலைமையில், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் அவர்கள் கூறுகையில், தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுக்களில் ஒன்றாகத் திகழ்ந்து வரும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு ஆகியவைகள் ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவினை முன்னிட்டு, அனைத்துக் கிராமப்புறப் பகுதிகளிலும் வெகு விமர்ச்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றன. அதில், குறிப்பாக, சிவகங்கை மாவட்டம், சிறாவயல் ஜல்லிக்கட்டு என்பது மாநில அளவில் புகழ்பெற்றதாக திகழ்ந்து வருகிறது. இத்தகைய வீர விளையாட்டானது 300 ஆண்டுகளாக தொடர்ந்து, தொன்று தொட்டு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
பொங்கல் திருநாள் விடுமுறைகளில் பொதுமக்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு வருகை புரிந்து, உற்றார் உறவினர்களுடன் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடி வருவார்கள். அதில், நமது சிவகங்கை மாவட்டத்தில், காணும் பொங்கல் அன்று, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள பொதுமக்களும் சிறாவயல் மஞ்சுவிரட்டுக்கு அதிகாலை முதல் வருகை தந்து இந்நிகழ்வினை ஒன்றிணைந்து கொண்டாடுவது, சிறப்புக்குரியதாகும்.
ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் சிறாவயல் மஞ்சுவிரட்டு திடலில் பல்வேறு கட்டமைப்பு வசதிகள் சட்டமன்ற உறுப்பினராகிய எனது நிதியின் கீழும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவைகளை வெளிக்கொணரும் வகையிலும், தமிழர்களின் வீர விளையாட்டை எவ்வித இடையூறுன்றி சிறப்பாக தமிழகத்தில் நடத்திடவும், தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து நடவடிக்கைகளையும் சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்கள்.
அதனடிப்படையில், அரசின் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் முறையாகப் பின்பற்றி, இவ்விழாவினை சிறப்பாக நடத்துவதற்கான அனைத்துப் பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெற்ற வரும் பணிகள் தொடர்பாக, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு தெரிவித்தனர்.