சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. சில இடங்களில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கடலூர் மாவட்டத்தின் வடக்கு பகுதியில் 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
பருவமழை தீவிரமடைந்துள்ளதால், தமிழக கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தமிழகத்தை நோக்கி வீசும் மேற்குக் காற்றில் வேக வேறுபாடு உள்ளது. இதன் காரணமாக இன்று முதல் 11ம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30-40 கிமீ வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. 9ம் தேதி வரை மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 35-45 கி.மீ. வேகத்தில் 55 கி.மீ. சூறாவளி காற்றும் அதிக வேகத்தில் வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.