சென்னை: நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:-
தென்னிந்தியாவின் கிழக்குக் கடலோரப் பகுதிகளில் வளிமண்டலத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். அக்டோபர் 31-ம் தேதி தமிழகம், புதுவை, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
நவம்பர் 1-ம் தேதி தமிழகம், புதுவை, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நவம்பர் 2-ம் தேதி தமிழகம், புதுவை, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகளான நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நவம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை, காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.