இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:- கடந்த 24 மணி நேரத்தில், தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தென்னிந்திய பிராந்தியங்களின் தாழ்வான பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு காற்று சந்திக்கும் பகுதி உள்ளது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாட்டில் ஒன்று அல்லது இரண்டு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

8 முதல் 12-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும். சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸாக இருக்கும். தென்மேற்கு பருவமழை அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் 13-ம் தேதி தொடங்கும் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.