தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- பூமத்திய ரேகை மேற்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாலத்தீவுகளில் இருந்து தெற்கு கேரளா வரை வளிமண்டலத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. காலையில் லேசான மூடுபனி எதிர்பார்க்கப்படுகிறது. 15 மற்றும் 16-ம் தேதிகளில் தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும். 17 மற்றும் 18-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மேலும் 19 மற்றும் 20-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின்படி, அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 9 செ.மீ., கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுர்காவில் 7 செ.மீ., கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் 6 செ.மீ., திருவாரூர் மாவட்டம் நன்னிலம், திருப்பூர் மாவட்டம் குண்டத்தில் தலா 5 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
15, 16, 17 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.