ஏற்கனவே முக்கிய நகரங்களுக்கு அதி நவீன வால்வோ பேருந்துகளான ஐராவத் பேருந்துகளை இயக்கி சாதனை படைத்துள்ள நிலையில், தற்போது அம்பாரி உத்சவ் பேருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது. வால்வோ 9600 என்ற சொகுசு பேருந்துகளை தூங்கும் வசதியுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம், நாட்டிலேயே நீண்ட தூரப் பயணங்களுக்கு அதிக சொகுசு வசதிகளுடன் பேருந்துகளை இயக்கும் பெருமைக்குரிய மாநிலமாக கர்நாடகா திகழ்கிறது.
பெங்களூரு, ஐதராபாத், கோழிக்கோடு உள்ளிட்ட பெருநகரங்களுக்கு இந்த பேருந்துகள் இயக்கப்படுவதால், பயணிகள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழக போக்குவரத்து துறை சளைத்ததாக இல்லை. 300 கி.மீ. நீண்ட தூரம் செல்லும் பயணிகளுக்கு சொகுசுப் பேருந்துகளை இயக்கும் திட்டம் 1975-ம் ஆண்டிலேயே தமிழகத்தில் வகுக்கப்பட்டு, அதற்கென தனித் துறை உருவாக்கப்பட்டு, 1980-ம் ஆண்டு திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம் தொடங்கப்பட்டது.
அப்போது தொலைதூர பயணிகள் போக்குவரத்தில் நாட்டிலேயே முன்னோடி மாநிலமாக விளங்கும் திருவள்ளுவர் போக்குவரத்து கழகத்துக்கு அதிநவீன பேருந்துகள் வாங்கப்பட்டன. ஆனால், காலப்போக்கில் பல்வேறு பெயர்களில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு தற்போது அரசு விரைவு போக்குவரத்து கழகம் (எஸ்இடிசி) என்ற பெயரில் நீண்ட தூரத்திற்கு பழைய பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இவற்றில் தற்போது 1,078 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பொதுவாக, பேருந்துகள் பழைய பேருந்துகளாகக் கருதப்படுகின்றன, மேலும் அவை 1.2 மில்லியன் கிமீ தூரம் பயணிக்கும் போது அகற்றப்படும். அந்த கட்டத்தை கடந்த 260 பஸ்களுக்கு பதிலாக மட்டுமே புதிய பஸ்கள் வாங்கப்படுகின்றன. 2020க்கு பின், 2024ல் தான் புதிய பஸ்கள் வாங்கப்படுகின்றன.அதுவும் பிற மாநில சொகுசு பஸ்களுடன் ஒப்பிட முடியாது. குறைந்த கட்டணத்தில் சொகுசு பயணத்தை வழங்குகிறோம் என்ற அரசு சாக்கு போக்கு தற்போதைய காலத்திற்கு ஏற்புடையதல்ல.
தமிழகம் முழுவதும் 1,500க்கும் மேற்பட்ட ஆம்னி சொகுசு பஸ்கள் இயக்கப்பட்டு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பண்டிகைக் காலங்களில் மூன்று மடங்கு அல்லது நான்கு மடங்கு கட்டணம் வசூலித்தாலும், பயணிக்க இன்னும் காலி இடம் இல்லை. தமிழக அரசின் விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் தினமும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கின்றனர்.
அதிக தேவை உள்ளதால், மற்ற மாநிலங்களுக்கு இணையாக ஏசி, தூங்கும் வசதி, சார்ஜிங் வசதி உள்ளிட்ட சர்வதேச தரத்தில் பஸ்களை இயக்க வேண்டும். அப்போதுதான் தமிழகம் மற்ற மாநிலங்களை விட பின் தங்கி இருக்காமல், போக்குவரத்து துறையில் நாட்டின் முன்னோடி மாநிலம் என்ற பெருமையை தமிழகம் கொண்டு வர முடியும்!