நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் மலை ரயில் சேவை 2 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. உதகை – மேட்டுப்பாளையம், உதகை – குன்னூர் இடையே மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பெஞ்சல் புயல் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால், ஊட்டி-குன்னூர், குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே ரயில் பாதையில் மண்சரிவு மற்றும் மரங்கள் விழும் அபாயம் உள்ளது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே நாளை வரையும், ஊட்டி-குன்னூர் இடையே இன்று வரையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மலை ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் ரயில் தண்டவாள பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தண்டவாள பராமரிப்பு பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குன்னூர் ரயில் நிலையம் எதிரே உள்ள தண்டவாளத்தில் பழைய மரக்கட்டைகளை அகற்றி புதிய பீம்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.