கோவை: மத்திய பிரதேசத்தில் தொழில் தொடங்க விரும்பும் தமிழக தொழிலதிபர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்க தயாராக உள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் இன்று கோவையில் நடக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் மோகன் யாதவ் தொழில் துறையினரை நேரடியாக சந்திக்கிறார்.
பல்வேறு சலுகைகளுடன் மத்திய பிரதேசத்தில் தொழில் தொடங்க வருமாறு தமிழக தொழிலதிபர்களுக்கு மாநில அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து கோவையில் கடந்த சில நாட்களாக மாநில சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் முகாமிட்டு தொழில் அதிபர்களை சந்தித்து பேசினர்.
இதையடுத்து, மாநில முதல்வர் மோகன் யாதவ், தொழிலதிபர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு, குழு ஏற்பாடு செய்துள்ளது; கோவை லீ மெரிடியன் ஹோட்டலில் இன்று காலை 10.30 மணி முதல் மதியம் 1 மணி வரை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதில் தொழிலதிபர்கள் மற்றும் பிரதிநிதிகளின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு எம்பி முதல்வர் பதில் அளிப்பார். மேலும், மாநிலத்தில் தொழில் துறைக்கான வாய்ப்புகள், அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், அரசு உதவிகள், தொழில் துறை வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்தும் விளக்கமளிப்பார்.
ஜவுளி மற்றும் பின்னலாடை தொழில், பொறியியல், ஆட்டோமொபைல், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்கின்றனர். முன்பதிவு செய்தவர்கள் மட்டும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.