தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தேர்தல் பிரச்சாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் தொடர்ந்து மாவட்டங்களுக்கு பயணம் செய்து மக்களை நேரடியாக சந்தித்து வருகிறார். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் அவர் பல்வேறு மாவட்டங்களில் பிரச்சாரம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் திருச்சி மற்றும் அரியலூரில் விஜயின் பிரச்சாரத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இதன் தொடர்ச்சியாக இந்த வாரம் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் விஜய் மக்களை சந்திக்க உள்ளார்.

நாகை மாவட்டத்தில் நடைபெறவுள்ள விஜயின் பொதுக்கூட்டம் புத்தூர் அண்ணாசிலை அருகே நடைபெற உள்ளது. இந்நிலையில், மாவட்ட தவெக செயல்வீரர் சுகுமார், நாகப்பட்டினம் மின்சார பொறியாளர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், விஜயின் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள பகுதியைச் சூழ்ந்துள்ள உயர் மின்னழுத்த மின் கம்பிகள் பொதுமக்களின் பாதுகாப்புக்கு ஆபத்தாக இருக்கக்கூடும் எனக் குறிப்பிட்டு, நிகழ்ச்சி நடைபெறும் நேரத்தில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும் அல்லது குறைந்தபட்சம் மின்சார ஊழியர்கள் நியமித்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அந்தக் கடிதம் அதிகாரப்பூர்வமாக மின்சார வாரியத்தால் பெற்றுக்கொள்ளப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பொதுக்கூட்ட நாளில் குறிப்பிட்ட இடங்களில் தற்காலிக மின் நிறுத்தம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இதோடு, மேடை அமைப்பு, போக்குவரத்து திட்டமிடல், பாதுகாப்பு, மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் மூலம் தீவிரமாக ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது. காவல்துறையும் கூடுதல் படையணியை நியமித்து பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளது.
விஜயின் வருகையால் நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் தேர்தல் சூடு அதிகரித்துள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்க உள்ளனர் என மதிப்பிடப்படுவதால், இந்த பொதுக்கூட்டம் அந்த பகுதிகளில் மிகப்பெரிய அரசியல் நிகழ்வாக மாறக்கூடும். தொண்டர்களின் பாதுகாப்பு கோரிக்கை மற்றும் மின்சார துறையின் நடவடிக்கை, நிகழ்ச்சி சுமுகமாக நடைபெறுவதற்கு முக்கிய காரணியாக இருக்கிறது. அதிகாரிகள் மக்கள் பாதுகாப்பை முதன்மையாகக் கொண்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.