சென்னை: நடிகர் நெப்போலியன் சமீபத்தில் அளித்த பேட்டியில், தவெக தலைவர் விஜயை கடுமையாக விமர்சித்துள்ளார். அரசியலுக்கு வருவதாக சொல்வோர் மக்களோடு நெருக்கமாக இருக்க வேண்டும், சில அடிப்படை பழக்கங்களையும் மாற்றிக் கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் தலைவராக முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

போக்கிரி படப்பிடிப்பு நேரத்தில் விஜயைச் சந்திக்க முயன்றபோது தன்னிடம் மரியாதை காட்டவில்லை என நெப்போலியன் பழைய சம்பவத்தை நினைவூட்டினார். “அவரை பார்க்க கேரவனுக்குள் செல்ல நினைத்தேன், ஆனால் பாதுகாவலர் அனுமதிக்கவில்லை. விஜய் கதவைத் திறந்து திட்டிவிட்டு உள்ளே சென்றார்” என்று அவர் கூறினார்.
விஜயின் நடத்தை குறித்து ராதாரவியும் இதேபோலவே வருத்தப்பட்டதாக நெப்போலியன் குறிப்பிட்டார். “மக்களுக்கு சேவை செய்ய வருபவர் தன்னுடைய தனிமனித உறவுகளிலும் மரியாதை காட்ட வேண்டும். தாய், தந்தை, மனைவி, மகனையே கிட்ட சேர்த்துக்கொள்ளாதவர் மக்களிடம் எப்படிச் சேர்வார்?” என கேள்வி எழுப்பினார்.
மேலும், “விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு ஏன்? தனி விமானம் ஏன்? ஜெயலலிதா, கருணாநிதி போன்ற தலைவர்கள் மக்களோடு பயணித்தார்கள். தலைவராக வேண்டுமானால் மக்களோடு இணைந்து நடந்து கொள்ள வேண்டும்” என நெப்போலியன் தெரிவித்தார்.