நம் நாட்டில், மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய திறந்தநிலை பள்ளிக்கல்வி நிறுவனம் (NIOS) தொலைதூரக் கல்வி மூலம் பள்ளிக் கல்வியை கற்பிக்கிறது.
இந்நிலையில், தேசிய திறந்தநிலைப் பள்ளி வழங்கிய 10 மற்றும் 12-ம் வகுப்பு சான்றிதழ்கள் அரசுப் பணி மற்றும் பதவி உயர்வுக்கு ஏற்றதல்ல என பள்ளிக் கல்வித்துறை கடந்த ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி அறிவித்தது மாணவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
அதை திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. தேசிய திறந்தநிலைப் பள்ளியில் வழங்கப்படும் 10 மற்றும் 12-ம் வகுப்பு சான்றிதழ்கள் அரசு வேலை மற்றும் பதவி உயர்வுக்கு தகுதியானவை என்று பள்ளிக் கல்வித்துறை தற்போது அறிவித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறைச் செயலர் சோ. மதுமதி, அதைப் பரிசீலனை செய்ததில், தேசிய திறந்தநிலைப் பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்புத் தேர்ச்சிச் சான்றிதழ்கள், தமிழகப் பள்ளிக் கல்வித் துறையால் வழங்கப்பட்ட 10 மற்றும் 12-ம் வகுப்புச் சான்றிதழ்களுக்குச் சமம் என்பது ஏற்கப்படுகிறது.
தேசிய திறந்தநிலைப் பள்ளி வழங்கும் 10 மற்றும் 12-ம் வகுப்பு சான்றிதழ்கள் அரசு வேலை மற்றும் பதவி உயர்வுக்கு தகுதியானவை. உயர்கல்வி மற்றும் மனிதவள மேலாண்மை துறைகளின் ஒப்புதலுடன் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.