சென்னை: கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை வழக்கில் பெண்கள் போராட்ட களத்தில் இறங்கியது நல்ல முன்னுதாரணம். இதுபோன்ற பெண்களுக்கு இனி பாலியல் வன்கொடுமை நடக்கவே கூடாது. இதற்கு தகுந்த விழிப்புணர்வை அரசு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர் அர்பிதா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: கடந்த ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் அரசு நடத்தும் ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பெண்கள் மத்தியில் பெரும் கோபத்தையும் இந்த சம்பவம் ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் உடன் நடவடிக்கை கோரி பெண்கள், பெண் மருத்துவர்கள், ஆண் மருத்துவர்கள் என அனைத்து தரப்பினரும் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். மேற்கு வங்க மாநிலத்தின் சீல்டா மாவட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் கடந்த 18ம் தேதி தீர்ப்பு வழங்கியது. “இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராய் 64,66 மற்றும் 103(1) பிரிவின் கீழ் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றவாளி எனவும், சாகும்வரை சிறைதண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த கொடூர சம்பவம் அரங்கேறி 162 நாட்களிலேயே வழக்கை விரைந்து விசாரித்து பிறகு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் பல இடங்களில் இதுபோல் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமை முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். பாதிப்பு யாருக்கோ என்று இல்லாமல் அனைத்து பெண்களும் நீதி கிடைக்க களம் இறங்க வேண்டும். அப்போதுதான் பெண்களை போகப் பொருளாக நினைக்கும் தன்மை மாறும்.
பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க தகுந்த விழிப்புணர்வு தேவை. பள்ளிக்கூடங்களில் இருந்தே இதை மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.