சென்னை: போக்சோ சட்டம் என்பது, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (Protection of Children from Sexual Offenses Act) ஆகும். இது 2012ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளானவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நிறுத்தப்படும் என்று சமூகநல ஆர்வலர் அர்பிதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: போக்சோ சட்டத்தின் நோக்கமே குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தண்டிப்பது, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகத்தின் அளவை குறைப்பது, குழந்தைகளின் நலன்களைப் பாதுகாப்பது ஆகும்.
இந்த சட்டத்தின் கீழ், பாலியல் வன்கொடுமைகள், பாலியல் துன்புறுத்தல், ஆபாசம், சுரண்டல், துஷ்பிரயோகம் ஆகியவற்றிற்கான தண்டனை விதிக்கப்படுகிறது. குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படலாம். அபராதமும் செலுத்த வேண்டியிருக்கும்.
இந்திய தேசிய குற்ற ஆவண காப்பகத் துறை 2020இல் வெளியிட்ட 2019ஆம் ஆண்டுக்கான தரவுகளில், இந்தியாவில் பாலியல் குற்றங்களில் இருந்து சிறார்களை பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் பதிவான குற்றங்களின் சதவீதம் 35.3.
அதில் உத்தர பிரதேசத்தில் 30, மத்திய பிரதேசத்தில் 18, ஹரியானா, கர்நாடகாவில் தலா 11, தமிழ்நாட்டில் 8, மகாராஷ்டிரா, தெலங்கானா, மேற்கு வங்கத்தில் தலா 6 சிறார் பாலியல் வல்லுறவு கொலை வழக்குகள் பதிவானதாக கூறப்பட்டுள்ளது.
இது தவிர சிறார் கடத்தல், தற்கொலைக்கு தூண்டுதல், காயம் ஏற்படுத்துதல், கொலை முயற்சி, சிசுக்கொலை என வழக்குகளின் எண்ணிக்கை ஒவ்வாரு மாநிலத்திலும் நீளுகின்றன.
இப்படி பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் ஏற்பட முக்கிய காரணம் போதிய விழிப்புணர்வு இல்லாததுதான். குழந்தைகள் முதல் பெண்கள் வரை தங்களின் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக துணிச்சலாக போராட வேண்டும். இதற்கான விழிப்புணர்வு வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.