சென்னை மெட்ரோ ரயில் பயணிகள் இனிமேல் பழைய மெட்ரோ கார்டுகளை பயன்படுத்த முடியாது. ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல், ‘சிங்கார சென்னை அட்டை’ எனப்படும் தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கே மெட்ரோ நிர்வாகம் முழுமையாக மாறுவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம், தற்போதுள்ள மெட்ரோ பயண அட்டைகள் அனைத்தும் செல்லாது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய பயண அட்டையைப் போலவே, புதிய அட்டையும் பயணத்திற்கு மட்டும் நிரப்பும் வசதியைத் தொடர்ந்து வழங்கும்.
சென்னை விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையும், பரங்கிமலை முதல் சென்ட்ரல் வரையும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பிஸியான நகர போக்குவரத்தில் இருந்து விடுபட விரும்பும் பயணிகள் மெட்ரோ ரயிலில் விரைவாகவும் வசதியாகவும் பயணம் செய்து வருகின்றனர். தினமும் லட்சக்கணக்கான பயணிகள் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றனர். மெட்ரோ ரயில் விரிவாக்கப்பணிகள் தற்போது வேகமாக நடந்து வருகின்றன. புதிய சுரங்கப் பணிகள் மற்றும் சோதனை ஓட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மேலும், தற்போது நடைமுறையில் உள்ள மெட்ரோ பயண அட்டையை பயன்படுத்தி வரும் பயணிகள், அதில் உள்ள மீதித் தொகையை 1ம் தேதிக்கு முன் பயணங்களில் பயன்படுத்தலாம். குறைந்தபட்சமாக ரூ.50க்கும் குறைவாக இருப்பின், அந்த அட்டையை மெட்ரோ கவுண்டர்களில் ஒப்படைத்து, புதிய சிங்கார சென்னை அட்டை (NCMC) இலவசமாக பெறலாம். பழைய அட்டையின் வைப்புத் தொகை மற்றும் மீதமுள்ள தொகையுடன் புதிய அட்டையை பயணிகள் தொடர்ந்தும் பயனடைய பயன்படுத்தலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மாற்றம் அனைத்து மெட்ரோ பயணிகளும் அறிந்து, காலமாற்றத்திற்கு ஏற்ப ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும். சிங்கார சென்னை அட்டை மூலம் நவீன வசதிகள் வழங்கப்படுவதாகவும், பயணிகள் அனுகூலத்துக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.