சென்னை: கருப்பு பணப் புழக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அந்தப் பிரச்னையில் முக்கிய பங்கு வகிக்கின்ற தங்கத்தின் பயன்பாடு குறித்து, அதை அடகு வைத்து கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் முறைகளை கட்டுப்படுத்தும் வகையில் ரிசர்வ் வங்கி புதிய நிபந்தனைகளை அறிவித்துள்ளது. இதுகுறித்து பாஜக தமிழ்நாடு துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி ஒரு விரிவான விளக்கத்துடன் வந்துள்ளார்.

அவரது விளக்கத்தின் படி, நகை கடன்கள் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஏழை எளிய மக்களுக்கு எதிரானவை அல்ல. மாறாக, கடந்த காலங்களில் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி சாரா நிறுவனங்களில் நடந்த பல்வேறு முறைகேடுகள் காரணமாகவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தங்க நகைகளின் மதிப்பு, தரம், எடை ஆகியவற்றில் சீர்மையற்ற தகவல்கள் தரப்பட்டதும், அனுமதிக்கப்பட்ட அளவை மீறி கடன் அளிக்கப்பட்டதும், நகைகளை ஏலம் விடும் விதிகளில் ஊழல் நடந்ததுமாக இருந்ததை ஆர்பிஐ கண்டறிந்தது.
இதனையடுத்து, வாடிக்கையாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. தங்க நகையை அடகு வைக்கும்போது அதன் மதிப்பின் 75 சதவீதம் வரை மட்டுமே கடன் வழங்கப்படும். மேலும், நகையின் உரிமையை உறுதி செய்யும் ஆதார ஆவணங்கள் வங்கி முன் சமர்ப்பிக்க வேண்டும். இது தவறான நகைகள், திருட்டு நகைகள் அடகு வைக்கப்படுவதை தடுக்கும்.
22 காரட் மற்றும் அதற்கு மேல் தரமான தங்க நகைகளுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும். 24 காரட் தங்க நகை என்றாலும், 22 காரட்டின் மதிப்புக்கே கடன் அளிக்கப்படும். அதேசமயம், தங்கக் கட்டிகள் அல்லது நகையல்லாத தங்கத்திற்குக் கடன் கிடையாது. இது கருப்பு பணத்தை தங்கத்தில் பதுக்கி அதை வெள்ளையாக்கும் முயற்சியை தடுக்க உதவும்.
ஒரு கிலோ வரை மட்டுமே தங்க நகையை அடகு வைக்க முடியும். கடனை திருப்பிச் செலுத்தியவுடன், 7 வேலை நாள்களில் நகை வாடிக்கையாளரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இல்லை என்றால் வங்கி ரூ.5,000 அபராதம் செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.
அதுமட்டுமல்ல, ஏலத்திற்கு செல்லும் நகைகளைப் பற்றிய தகவலை வாடிக்கையாளருக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்காவிட்டால் வங்கி மீது வழக்கு தொடர முடியும். ஏலத்தில் மேலதிக தொகை கிடைத்தால் அதன் மீதம் வாடிக்கையாளருக்கு வழங்கப்பட வேண்டும்.
வெள்ளி நகைகளுக்கும் கடன் வழங்கப்படுகிறது, ஆனால் 999 தரமானதாக இருக்க வேண்டும். இது கிராமப்புறங்களில் வாழும் ஏழை மக்களுக்கு நன்மை பயக்கும். மேலும், ஒருமுறை அடகு வைத்த நகையை முழுமையாக மீட்ட பின்னரே அதனை மீண்டும் அடகு வைக்க முடியும்.
இந்த அனைத்து நடவடிக்கைகளும் ஏழை, நடுத்தர மக்களை பாதுகாப்பதற்காகவே உருவாக்கப்பட்டவை என நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். தவறான விளக்கங்களால் மக்களிடையே குழப்பம் ஏற்படக்கூடாது என்றும், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் நடந்த முறைகேடுகளை சரி செய்யும் நோக்கில் ஆர்பிஐ எடுத்த முக்கியமான மற்றும் மக்களுக்குப் பயனுள்ள முடிவாக இதைக் பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.