விவசாய நிலம் வாங்க பெண்களுக்கு மானிய உதவி வழங்கும் புதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. விவசாய நிலங்களை பெண்களின் பெயரில் வாங்க உதவும் வகையில், ‘நன்னிலம் மகளிர் நில உரிமை திட்டம்’ உருவாக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், நிலத்தின் சந்தை மதிப்பில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் 18 முதல் 55 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.3 லட்சத்துக்கு குறைவாகவும் இருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரருக்கு சொந்தமாக விவசாய நிலம் இருக்கக்கூடாது.
இத்திட்டத்தின் கீழ், சந்தை மதிப்பீட்டின்படி நிலத்தின் விலை நிர்ணயம் செய்யப்படும், மேலும் முத்திரை கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படும். வாங்கிய நிலத்தை பத்து ஆண்டுகளுக்குள் விற்கக் கூடாது.
பயனாளிகள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் கடன் பெற்று நிலத்தை வாங்கலாம். இதன் மூலம் ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மக்களை நில உரிமையாளர்களாக உயர்த்தி சமூக நீதி நிலை நிறுத்தும் முயற்சியாக இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, விரைவில் பணிகள் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.