விழுப்புரம்: பாமகவில் பெரும் மாறுதல் நிகழும் சூழல் உருவாகியுள்ளது. கட்சியின் நிறுவனர் ராமதாஸ், பொதுக்குழுவை கூட்டுவதற்காக புதிய மாவட்ட செயலாளர்களை தொடர்ந்து நியமித்து வருகிறார். இதுவரை தமிழகம் முழுவதும் 27 புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனங்களில், அன்புமணி ஆதரவாளர்கள் நீக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

பாமக தலைவர் அன்புமணிக்கும், அவரது தந்தையும் பாமக நிறுவுனருமான ராமதாஸுக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில், அன்புமணி “பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டவருக்கே தலைவர் பதவி உரியது” என தெரிவித்து, ராமதாஸை நேரடியாக விமர்சித்தார்.
அதன்பிறகு, அன்புமணி, ராமதாஸ் கொள்கையை தானே கையில் எடுத்து கட்சியை வழிநடத்தப்போவதாக அறிவித்தார். இதனால் பாமக உயர்மட்டத்தில் கருத்து வேறுபாடுகள் மேலும் பெரிதாகின. இந்நிலையில், ஜிகே மணி உள்ளிட்ட சில முக்கிய நிர்வாகிகள் இருவருக்குள்ளேயான மோதலை தீர்ப்பதற்காக சமாதான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதுவரை எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இருவருக்குள்ளான இந்த மோதல், கட்சியின் அடிப்படை அமைப்பையே பாதிக்கும் நிலைக்கு சென்று விட்டது. ஒரு பக்கம், அன்புமணி ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார்; மற்றொரு பக்கம், ராமதாஸ் தனது கட்டுப்பாட்டில் உள்ள நிர்வாகிகளை மாற்றி புதிய நியமனங்களை அறிவித்து வருகிறார்.
பாமகவின் பொதுக்குழுவை கூடி மாற்றங்களை கொண்டுவரும் நோக்கத்துடன் ராமதாஸ் செயற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொருளாளர் திலகபாமா உள்ளிட்டோரை நீக்கிய பின்னணியும் இதுதான் என கூறப்படுகிறது.
பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பாமக நிர்வாகிகள் தைலாபுரம் தோட்டத்தை நோக்கி செல்கின்றனர். அங்கு ஏதேனும் முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. பாமகவில் அடுத்ததாக என்ன நடக்கும் என்பது குறித்து பரபரப்பு அதிகரித்து வருகிறது.