தமிழ்நாட்டில் சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து பல பெண்கள் வேலைக்காக தங்களது வீட்டை விட்டு நகரங்களுக்கு வந்து தங்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். இவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான தங்குமிடங்களை வழங்குவதற்காக “தோழி” எனும் பெயரில் மகளிர் விடுதிகள் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் பரங்கிமலை பகுதியில் புதிய மகளிர் விடுதி ஒன்று கட்டப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த விடுதியின் வசதிகள் மற்றும் பயன்பாடு குறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெண்கள் பணித்துறையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறார்கள் எனக் கூறியுள்ளார். குறைந்த வருவாயுடன் வாழும் பெண்கள் தங்குவதற்கான பாதுகாப்பான இடங்கள் தேவைப்படுவதால், தமிழ்நாடு அரசு இந்த விடுதிகளை உருவாக்கியுள்ளது.
புதிய விடுதி செயிண்ட் தாமஸ் மலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 144 படுக்கை வசதி கொண்ட இருவர் மற்றும் நால்வர் தங்கும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. விடுதியில் சுத்தமான குடிநீர், 24 மணி நேர பாதுகாப்பு, இலவச வைபை, பயோமெட்ரிக் அணுகல் மற்றும் பொழுதுபோக்கு அறை உள்ளிட்ட நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த விடுதியில் தங்க விரும்பும் பெண்கள் www.tnwwhcl.in என்ற இணையதளத்தின் மூலம் கிடைக்கும் படுக்கை விவரங்களை தெரிந்து கொண்டு முன்பதிவு செய்து கட்டணம் செலுத்தும் முறைமை மூலம் பதிவு செய்யலாம். இது வாரம், மாதம் மற்றும் சில நாட்களுக்கான தங்கும் தேவைக்கும் ஏற்ப செயல்படுகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விடுதியை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். வேலைக்காக வெளியூரில் தங்கும் அனைத்து பெண்களும் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.