புதுடெல்லி: டெல்லியில் கடந்த 2-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை உலக பாதுகாப்பு மாநாடு நடந்தது. இதில் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டு பேசியதாவது:-
இந்தியாவில் சாலைகளில் அத்துமீறல்கள் அதிகமாக உள்ளன. மீறுபவர்களுக்கு எவ்வளவு தான் அபராதம் விதிப்பது? அபராதத் தொகையை அரசு தொடர்ந்து உயர்த்த முடியாது. இதுதான் பிரச்சனை. இப்பிரச்னைக்கு தீர்வு காண, சாலையை பயன்படுத்துவோர் மனநிலையில் மாற்றங்களை கொண்டு வருவது அவசியம்.
சாலை விதிகளை கடுமையாக அமல்படுத்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறோம். மீறுபவர்களுக்கான அபராதத்தையும் அதிகப்படுத்தியுள்ளோம் ஆனால் பலனில்லை. இந்த சூழ்நிலையில், வாகன ஓட்டிகளின் நடத்தையில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.
அதற்கு சமூக, கல்வி அமைப்புகள் ஒத்துழைக்க வேண்டும். 2019-ல் மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. அதன்படி அபராதத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. அதன் பிறகும் சாலை விதிமீறல்கள் அதிகரித்து வருகின்றன. சாலை விபத்துகளை சட்டங்களால் மட்டும் தடுக்க முடியாது.
வாகன ஓட்டிகளின் மனநிலையில் மாற்றம் வர வேண்டும். வாகனங்களை பாதுகாப்பாக ஓட்டவும். இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாததால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.
எனவே, சலுகை விலையில் ஹெல்மெட் வழங்க இருசக்கர வாகன உற்பத்தியாளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். 2022-ல் மட்டும் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளானதில் 50,029 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல இந்திய சாலைகளில் ‘லேன்’ ஒழுங்குமுறை இல்லை.
பேருந்து மற்றும் லாரி ஓட்டுநர்கள் சாலைகளில் உள்ள ‘லேன்’களை முறையாக நிர்வகித்தால், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளைத் தவிர்க்கலாம். மேலும், விபத்தில் சிக்குபவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கும் வசதிகளை அதிகப்படுத்த வேண்டும். இவ்வாறு அமைச்சர் நிதின் கட்கரி பேசினார்.