கடலூர்: என்எல்சி இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் 10,000-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் 15 கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 19 மாதங்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நெய்வேலி மெயில் பஜார் காமராஜர் சிலை அருகே கடையடைப்பு அறிவிப்பு கூட்டம் நடந்தது.
என்எல்சி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்க கவுரவத் தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். தலைவர் அந்தோணி செல்வராஜ், செயலாளர் செல்வமணி, சிறப்பு செயலாளர் சேகர் ஆகியோர் 20 சதவீத போனஸ் வழங்க கோரி பேசினர். இறுதியாக கடந்த 28-ம் தேதி காலை ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவரும் பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதாக அறிவித்தனர்.
அதன்பிறகு தமிழக தலைமை செயலாளரை சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளோம் என்றனர். அதன்படி இன்று காலை கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் இருந்து என்எல்சி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றனர்.
சங்க கவுரவ தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். தலைவர் அந்தோணி செல்வராஜ், செயலாளர் செல்வமணி, சிறப்பு செயலாளர் சேகர் முன்னிலை வகித்தனர். ஊர்வலமாக சென்றவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
ஒப்பந்த தொழிலாளர்களுக்கு என்எல்சி இந்தியா நிர்வாகம் 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என்ற பிரச்னையில் தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளனர். பணிநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.